சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மாமில், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்களைக் கொண்டு ‘அதிரை அரேபியன் ஸ்டிரைக்கர்ஸ்’ (Adirai Arabian Strikers) என்ற புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாகக் களமிறங்கியுள்ள இந்த அணி, தஹ்ரான் கிரிக்கெட் லீக் (Dhahran Cricket League - DCL) நடத்தும் DCLv31 தொடரில் தனது முதல் போட்டியில் பங்கேற்று அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற இப்போட்டியில் அதிரை அரேபியன் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் யுனைடெட் கிரிக்கெட் கிளப் (United Cricket Club) அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த அதிரை அரேபியன் ஸ்டிரைக்கர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்தது. அணியின் தொடக்க வீரர் இஸ்மாயில் முஹம்மது சித்தீக் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவருக்குத் துணையாக அதிரடி காட்டிய முஹம்மது இஸ்மாயில் 24 பந்துகளில் 34 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) விளாசி அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
அடுத்து 144 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய யுனைடெட் கிரிக்கெட் கிளப் அணி, அதிரை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிரை அரேபியன் ஸ்டிரைக்கர்ஸ் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஜமால் முஹம்மது தமீம் 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சுஹூத் முஹம்மது, அஹ்மத் மொஹிதீன், இஸ்மாயில் முஹம்மது சித்தீக் மற்றும் இஸ்மாயில் முகமது சலீம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
இதன் மூலம் அதிரை அரேபியன் ஸ்டிரைக்கர்ஸ் அணி தனது அறிமுகப் போட்டியிலேயே 26 ரன்கள் வித்தியாசத்தில் யுனைடெட் கிரிக்கெட் கிளப் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது. முதல் போட்டியிலேயே தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடியுள்ள அதிரை அணி வீரர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிரை வாழ் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.




Comments (0)
No comments yet.
Write a comment