அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவ்வழியாகச் செல்லும் அனைத்து தொலைதூர பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிராம்பட்டினம் நகர செயலாளர் ஹசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"அதிராம்பட்டினம் வழியாக ஏராளமான தொலைதூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வராமல் செல்வதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேரக்காப்பாளர் அறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

பேருந்துக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பயணிகளின் நலன் கருதி போதிய எண்ணிக்கையில் இருக்கைகள் அமைத்துத் தர வேண்டும். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இந்த அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்" என நகர செயலாளர் ஹசன் வலியுறுத்தியுள்ளார்.