கோடை கால விடுமுறைக்கு பிறகு நாளை முதல் அணைத்து பள்ளிகளும் திறப்பு!!

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் தூய்மை படுத்தப்பட்டு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.

கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியன்று (நாளை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஜூன் 20ஆம் தேதியன்று பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதியன்று பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்
இதனிடையே பள்ளிகள் திறப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளியில் மின் இணைப்புகளில் மின்கசிவு கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்து சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகள் ஆய்வு
பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவ, மாணவிகளை அழைத்து வரப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பும்
மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட பள்ளி வளாகங்களும் விடுமுறையை அனுபவித்த மாணவர்களும் நாளை முதல் இயல்பு நிலைக்கு திரும்ப உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பள்ளி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படும். இதுபோன்ற காரணங்களினால் சில நாட்களாக குறைந்து இருந்த போக்குவரத்து நெரிசல் மீண்டும் அதிகரித்து காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Prayer Times