துபாயில் 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்துள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் இமாம்கள், போதகர்களுக்கு கோல்டன் விசா வழங்க, துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவின் படி உடனடியாக துபாயில் கடந்த 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பள்ளிவாசல்களின் இமாம், முஅத்தின் (பாங்குகூறு பவர்கள்) மற்றும் போதகர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுவருகிறது. இஸ்லாமிய விவகாரத்துறை சார்பில் கோல்டன் விசாவுக்கான அனைத்து செயல்பாடுகளும் விரைவில் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் துபாயில் வசிக்கும் தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த MSM ஹாஜி ஹாபிஸ் எம்.ஏ.எம் முகம்மது அப்துல்லாஹ் என்பவருக்கு அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இவர் இமாமாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1979-ம் ஆண்டில் துபாய் வருகை புரிந்தார். தொடர்ந்து தனியார் பள்ளிவாசல்களில் இமாமாக பணிபுரிந்து வந்தார். அதனை தொடர்ந்து இஸ்லாமிய விவகாரத் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிவாசல்களில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தொடர்ந்து தற்போது மிர்திப் பகுதியில் உள்ள மவுசா மன்னாயி பள்ளி வாசலில் தொழுகை நடத்தும் பணியில் இருந்து வருகிறார். அவர்,துபாய் ஆட்சியாளர் மற்றும் பட்டத்து இளவசருக்கு தனது நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.