விஜய் தொலைக்காட்சியின் முன்னணி விவாத நிகழ்ச்சியான ‘நீயா நானா’வில் பங்கேற்றுப் பேசிய அதிரையைச் சேர்ந்த பத்திரிகையாளர் நூருல் இப்னு ஜஹபர் அலி, தனது சிறப்பான கருத்துக்களுக்காகத் தொகுப்பாளர் கோபிநாத்திடமிருந்து ஸ்மார்ட் போன் பரிசை வென்றுள்ளார்.
சன் நியூஸ், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம், நியூஸ் தமிழ், மாலை முரசு உள்ளிட்ட முன்னணி ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர், தற்போது 'பிஹைண்ட்வுட்ஸ்' (Behindwoods) நிறுவனத்தில் முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். சமூக ஊடகங்களில் உண்மை சரிபார்ப்பு (Fact Check) காணொளிகள் மூலம் போலியான செய்திகளை அம்பலப்படுத்தி வரும் இவர், பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 'Fact Check' விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில், 'நீயா நானா' நிகழ்ச்சியின் "அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளச் சொல்லும் அரசு vs மறுக்கும் தம்பதிகள்" என்ற தலைப்பிலான விவாதத்தில் இவர் பங்கேற்றார். அப்போது, சமூகத்தில் பிறப்பு விகிதம் குறைவதால் எதிர்காலத்தில் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகளைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான தரவுகளுடன் எடுத்துரைத்தார்.
மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த விவாதத்தில், இவரது கருத்துக்களைச் சுட்டிக்காட்டி தொகுப்பாளர் கோபிநாத் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார். மேலும், நிகழ்வில் மிகச் சிறப்பாகவும் தர்க்கரீதியாகவும் பேசியதற்காக, கோபிநாத் அவருக்கு ஸ்மார்ட் போனைப் பரிசாக வழங்கி பாராட்டினார். தற்போது இவரது விவாதப் பேச்சிற்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



Comments (0)
No comments yet.
Write a comment