அரசு நிதியுதவி பெறும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மதியழகன் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் திருமதி மீனா சுந்தரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நைனா முகமது உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பண்டைய காலம் தொடங்கி, தற்காலம் வரை உபயோகப்படுத்தப்பட்டு வரும் அறிவியல் சாதனங்கள், புதிய கண்டுபிடிப்புகள் விவசாயம், சூரிய ஒளி மின்சார உற்பத்தி சாதனங்கள் உட்பட பல்வேறு வகையான அறிவியல் பொருள்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
தமிழ், ஆங்கிலம் கணிதத்துறையின் சார்பிலும் காட்சிப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் பலர் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் அஜ்முதீன்,உதவித் தலைமையாசிரியர்களான அஷ்ரப் அலி, முத்துக்குமார், ஆஷா ஆகியோர் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர்.

