அதிரை மக்தப் ஹனீப் பள்ளியில் மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் அல்குர்ஆன் ஓதும் துவக்க விழா இனிதே நடைபெற்றது!

அதிராம்பட்டினம் மக்தப் ஹனீப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், பாலர், ஒன்றாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அல்குர்ஆனைப் பார்த்து ஓதும் துவக்க நிகழ்வும் நேற்று (15.09.2026, செவ்வாய்க்கிழமை / ஹிஜ்ரி 1448 ரபிஉல் ஆகிர் பிறை 2) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இனிய இறைமறை கிராஅத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், காதர் முஹைதீன் கல்லூரி ஆசிரியரும், மக்தப் முகைதீன் ஜும்மா பள்ளிப் பொறுப்பு ஆசிரியருமான மௌலவி தாஜுதீன் உஸ்மானி அவர்கள் சிறப்புரையாற்றினார். குறுகிய நேரத்தில் மாணவர்களின் நற்பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகளை விளக்கி அவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஹனீப் பள்ளி இமாம் அவர்களின் முன்னிலையில், 7 மாணவர்கள் புனித அல்குர்ஆனைப் பார்த்து ஓதும் நற்பணி இனிதே துவங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஐவேளை தொழுகையில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பள்ளிக்குத் தவறாது வருகை தந்த மாணவர்கள், அரையாண்டுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் மற்றும் ஊக்கப் பரிசு பெறும் மாணவர்கள் என அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இப்பரிசுகளை ஹனீப் பள்ளியின் தலைவர் ஹாஜி முஹம்மது உமர், பள்ளிச் செயலாளர் ஹாஜி முகம்மது இப்ராஹிம், மௌலவி தாஜுதீன் உஸ்மானி, பள்ளி இமாம் மௌலானா ஜமால் முஹம்மது மற்றும் சமூக ஆர்வலர் ஹாஜி அகமது அனஸ் ஆகியோர் முன்னின்று வழங்கி மாணவர்களை வாழ்த்தினர்.

இந்நிகழ்வினை மக்தப் பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் மௌலானா இலியாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார். மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான மஹல்லாவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை மக்தப் மேம்பாட்டுக் குழுவினர் நேர்த்தியாகச் செய்திருந்தனர். நிறைவாக துஆ ஓதப்பட்டு, வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி விழா இனிதே நிறைவுற்றது.

Prayer Times

Advertisement

error: Content is protected !!