அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘செக்கடி FC’ (Chekkadi FC) சார்பில், சென்னையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘1st Year 5’s Turf Football Tournament’ மிகச் சிறப்பான முறையில் விறுவிறுப்புடன் நடந்து முடிந்தது. அதிரையைச் சேர்ந்த இளைஞர்கள் சென்னையில் ஒருங்கிணைந்து டர்ப் மைதானத்தில் கால்பந்து தொடர் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இத்தொடரின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, சம்சுல் இஸ்லாம் சங்கம் சென்னை அசோசியேஷன் (SISCA) செயலாளர் ஜனாப் A.M. ஜஹாபர் அலி மற்றும் இணைச் செயலாளர் ஜனாப் அகமது அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டு, முதல் ஆட்டத்தினைத் தொடங்கி வைத்து இளம் வீரர்களுக்கு வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்தனர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 12 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதல் இறுதி ஆட்டம் வரை ஆட்டக்களம் அனல் பறக்கும் வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைந்தது.
வெற்றி பெற்ற அணிகளின் விவரம்:
முதல் இடம் (Winner): ரெபலியன் பிரதர்ஸ் (Rebellion Brothers)
இரண்டாம் இடம் (Runner): நித்யா பிரதர்ஸ் (Nithya Brothers)
மூன்றாம் இடம் (3rd Place): செக்கடி எப்சி (Chekkadi FC)
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர் (Player of the Tournament) மற்றும் சிறந்த கோல்கீப்பருக்கான (Best Goalkeeper) தனிநபர் விருதுகளும் வழங்கப்பட்டன.
சென்னையில் 12 அணிகளை ஒருங்கிணைத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்த்தியாகவும் இந்த கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்த ‘செக்கடி FC’ இளைஞர்களுக்கும், வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் ‘டைம்ஸ் ஆஃப் அதிரை’ (Times of Adirai) சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!










