நாடு தழுவிய அளவில் வங்கி தொழிற்சங்கங்கள் வரும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. வழக்கமாக சனி (செப்.26) மற்றும் ஞாயிறு (செப்.27) விடுமுறையுடன் இந்த வேலைநிறுத்தமும் சேரும்போது தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதனைத் தவிர்க்கும் வகையில், செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) பொதுத்துறை மற்றும் பிராந்திய ஊரக வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய வங்கி வேலைகளை செப்.27 அன்று நேரில் சென்று முடித்துக் கொள்ளலாம்.
அதே சமயம், செப்.28 முதல் 30 வரை கிளைப் பணிகள், காசோலை பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்தியன் வங்கி (Indian Bank) முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது:
நேரடிச் சேவை: கிளைக்கு நேரடியாகச் சென்று செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்: ஏடிஎம் (ATM), மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மற்றும் தேசிய உதவி எண் (1800 1700) ஆகிய சேவைகளை வழக்கம்போல் தடையின்றிப் பயன்படுத்தலாம்.
பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணம் ரத்து: வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, வரும் செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரை மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு எவ்விதக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது (No Charges) என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் வங்கிப் பரிவர்த்தனைகளை இதற்கேற்பத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

