அதிரை கடற்கரைத் தெருவில் புதிய விளையாட்டு அமைப்பு ‘BSA’ தொடக்கம்; ஜமாஅத் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகம் மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை (17-09-2026) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடற்கரைத் தெருவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விளையாட்டுத் துறையை முறைப்படுத்துதல் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல் தொடர்பாகப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:

புதிய விளையாட்டு அமைப்பு உதயம்: கடற்கரைத் தெருவில் உள்ள கால்பந்து, கிரிக்கெட் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு அணிகளைச் சார்ந்த வீரர்கள் அனைவரும் சங்கத்தின் நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டனர். மேலும், இந்த விளையாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பிற்கு ‘பீச் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்’ (Beach Sports Association – BSA) என ஒருமனதாகப் பெயர் சூட்டப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

1. ஜனாஸா மரியாதை: நமது பகுதியில் ஏதேனும் மரணங்கள் ஏற்பட்டால், ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் வரை இளைஞர்கள் எவ்வித விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

2. பொதுக்கூட்டங்களில் பங்களிப்பு: கடற்கரைத் தெருவின் முக்கிய பொதுக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் எவ்வித விளையாட்டுகளும் நடைபெறாமல், இளைஞர்கள் அனைவரும் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!