தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறையான, “முதலமைச்சரின் முகவரி” (CM’s Helpline and Grievance Redressal) துறைக்கு, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தேர்வாகிப் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கும், அரசின் பல்வேறு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கும் உதவக்கூடிய அதிகாரப்பூர்வமான முக்கிய அமைப்பாக இத்துறை இயங்கி வருகிறது.
இத்துறையில் பணியாற்றுவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 140-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். இதில் தகுதியின் அடிப்படையில் 36 பேர் மட்டுமே இறுதிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 36 பேரில், நம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களின் மகன் அஸ்பாக் அகமது மற்றும் ராஜிக் அகமது அவர்களின் மகன் ஜியாத் ஆகிய 2 இளைஞர்கள் இடம் பிடித்து அதிரைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
தற்போது முதலமைச்சரின் முகவரித் துறையில் தங்களது பணிகளைத் தொடங்கி சிறப்பாக ஆற்றி வரும் இந்த இரு இளைஞர்களுக்கும் ‘டைம்ஸ் ஆஃப் அதிரை’ சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




