களத்தில் மோதப்போவது யார் யார்? அதிரை AFWA கால்பந்து தொடரின் விறுவிறுப்பான அட்டவணை வெளியீடு!

அதிராம்பட்டினத்தில் “அதிரை பிரண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ்” (AFWA) அமைப்பின் சார்பில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட உள்ள “24th South India Level 7’s Football Tournament 2026” கால்பந்து போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அணிகள் மற்றும் விளையாட்டு நேர அட்டவணை (Match Fixtures) நேற்று சிறப்பாக வெளியிடப்பட்டது.

நேற்று (21-06-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 07:30 மணியளவில் அதிராமப்பட்டினத்தில் உள்ள AFWA ஸ்போர்ட்ஸ் அரேனா மைதானத்தில் இவ்விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம், AFWA மற்றும் AFWA கால்பந்து அமைப்பின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் முக்கியப் பகுதியாக, ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத் தலைவர் ஜனாப். சரபுதீன் அவர்கள் 2026-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ அட்டவணையை வெளியிட, அதனை அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் ஜனாப். இம்தியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

“போதைப்பொருளுக்கு எதிரான” (Say No to Drugs) விழிப்புணர்வை முன்னிறுத்தி நடத்தப்படும் இத்தொடர், வரும் ஜூன் 26, 2026 அன்று தொடங்கி ஜூலை 12, 2026 அன்று இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது. இதில் தமிழ்நாடு போலீஸ், வெஸ்டர்ன் FC அதிரை, ராயல் FC அதிரை, சென்னை சிட்டி போலீஸ், பெங்களூரு, கேரளா, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி 24 பலத்த அணிகள் (Pool A, B, C, D என நான்கு பிரிவுகளாக) களம் காண்கின்றன.

மொத்தம் ₹1,70,000-க்கும் அதிகமான பரிசுத்தொகை, சுழற்கோப்பைகள் மற்றும் 15 தனிநபர் சிறப்பு விருதுகளுடன் அதிரை மண்ணில் இந்த மெகா கால்பந்து திருவிழா ஜூன் 26 மாலை 04:30 மணி முதல் அதிரப்போகிறது. மைதானத்திற்கு வர இயலாத விளையாட்டு ரசிகர்களுக்காக அனைத்துப் போட்டிகளும் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையச் சேனலில் நேரலையாக (Live Telecast) ஒளிபரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prayer Times

Advertisement

error: Content is protected !!