ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களும் தங்களின் மொபை சேவை கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனமும் ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டுக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோவில் தினசரி குறைந்தபட்சம் ஒரு ஜிபி டேட்டாவுடன் கூடிய மாத ரீசார்ஜ் கட்டணம் 209 ரூபாயிலிருந்து 249 ரூபாயாகவும், ஏர்டெலில் 265 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி குறைந்தபட்சம் 2ஜிபி டேட்டாவுடன் கூடிய 56 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் ஜியோவில் 533 ரூபாயிலிருந்து 629 ரூபாயாகவும், ஏர்டெல்லில் 549 ரூபாயிலிருந்து 649 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 ஜிபி டேட்டாவுடன் கூடிய 84 நாட்களுக்கான ரீசார்ஜ் கட்டணம் ஜியோவில் 719 ரூபாயிலிருந்து 859 ரூபாயாகவும், ஏர்டெல்லில் 839 ரூபாயிலிருந்து 979 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் கூடிய வருடாந்திர ரீசார்ஜ் கட்டணம் ஜியோவில் 2 ஆயிரத்து 999 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 599 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏர்டெல்லில் இதே அளவிற்கு கட்டண உயர்வு உள்ள நிலையில், இந்த வேலிடிட்டிக்கு தினமும் 2 ஜிபி மட்டுமே டேட்டா வழங்கப்படுகிறது. 10ஆவது அலைக்கற்றை ஏலம் முடிந்த நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் தங்கள் கட்டண விகிதங்கள் 11 முதல் 24% உயர்த்தப்படுவதாக வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது. இதன்படி 28 நாட்களுக்கு 179 ரூபாய் என்ற கட்டணம், 199 ரூபாயாக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினசரி ஒன்றரை ஜிபி வீதம் 84 நாட்களுக்கு சேவை வழங்கும் திட்டத்தின் கட்டணம் 719 ரூபாயில் இருந்து 859 ரூபாயாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prayer Times