முன்னணி ஊடகமான ‘Behindwoods’ முதன்மை தயாரிப்பாளராக அதிரையை சேர்ந்த நூருல் நியமனம்!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஊடகவியலாளர் நூருல் இப்னு ஜஹபர் அலி, தனது ஆரம்பகால ஊடகப் பயணத்தை உள்ளூர் இணையதளமான அதிரை பிறையில் தொடங்கினார். ஊடகத் துறை மீது கொண்ட அலாதி பற்றால், அடுத்தடுத்த கட்டங்களுக்குத் தன்னை நகர்த்திய அவர், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் முதன்மை ஊடக நிறுவனங்களில் முத்திரை பதித்து வருகிறார்.

மாலை முரசு, சன் நியூஸ், நியூஸ் தமிழ், ஒன் இந்தியா மற்றும் தமிழக அரசின் போலிச் செய்தி தடுப்புப் பிரிவு (Fact Check Unit) உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய பழுத்த அனுபவம் இவருக்கு உண்டு.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஏராளமான கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே ‘உண்மை சரிபார்ப்பின்’ (Fact Checking) முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘Challenge Of Social Media’ பயிற்சி பட்டறையில், முன்னாள் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கரங்களால், நூருல் இப்னு ஜஹபர் அலி பாராட்டும் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நமதூரைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தின் மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து, வெற்றிகரமாகப் பயணித்து வருவது இதுவே முதல்முறை. தனக்குக் கிடைத்த இத்தகைய அங்கீகாரங்கள் மற்றும் நேர்மையான, துல்லியமான செய்தியிடல் மூலம் ஊடகத்துறை சார்ந்த விருதுகளையும் வென்று, தன் சொந்த மண்ணிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது, தமிழகத்தின் முன்னணி மற்றும் மிகப்பிரபலமான டிஜிட்டல் ஊடகமாகத் திகழும் ‘Behindwoods’ நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பாளராக (Principal Program Producer) புதிய பொறுப்பில் பணியில் இணையவுள்ளார்.

அதிரையை சேர்ந்த நூருல் இப்னு ஜஹபர் அலி அவர்களின் இந்த வளர்ச்சி, வெறும் தனிநபர் வெற்றி மட்டுமல்ல; ஊடகத்துறையில் சாதிக்கத் துடிக்கும் அதிரை மற்றும் தமிழகத்தின் பிற பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகம் ஆகும்.

முறையான வழிகாட்டுதலும், விடாமுயற்சியும் இருந்தால் எந்தவொரு உயரத்தையும் எட்டலாம் என்பதற்கு இவரது வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணம். இவரைப் போன்ற லட்சியமிக்க இளைஞர்களும், திறமையான ஊடகவியலாளர்களும் சமூகத்தினால் அடையாளம் காணப்பட்டு, தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

புதிய பொறுப்பை ஏற்கும் நூருல் இப்னு ஜஹபர் அலி அவர்கள், தன் பயணத்தில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க டைம்ஸ் ஆஃப் அதிரை (Times of Adirai) இணையதளம் சார்பாக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!