கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2வது கட்ட விரிவாக்கத்தின்போது யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்கவில்லையோ, அவர்கள் ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பினால், அதற்கான தகுதிகள் இருந்தால், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து இப்போது மேல்முறையீடு செய்யலாம். அதுவும் ஆன்லைனிலேயே மேல்முறையீடு செய்ய முடியும். எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் சேவையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதன்முதலாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் பெயரில் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2023 ஆம் ஆண்டு தொடங்கியது. அதில், 1.13 கோடி பெண்கள் பயனாளிகளாக இருந்தனர். அவர்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்தது. இதனால், இத்திட்டத்தில் சேராத மற்ற பெண்களும், தங்களையும் இத்திட்டத்தில் சேர்க்கக்கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தியதால், இத்திட்டத்தில் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க அரசு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கியது.
இந்த விரிவாக்கத்தின்போது யாருக்கெல்லாம் ரூ.1000 வரவில்லையோ, அந்த பெண்களின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மனுக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவை ஆகும். இருப்பினும் தகுதிகள் இருப்பதாக கருதும் பெண்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய அரசு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதனால், தங்களின் மனுக்கள் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அந்த காரணம் தவறானவை என கருதும் பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக அரசின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https:// kmut.tnega.org/kmut-grievance/ என்ற பக்கத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
எப்படி மேல்முறையீடு செய்ய வேண்டும்?
பெண்கள், ஆன்லைனில் https://kmut.tnega.org/ kmut-grievance/ என்ற பக்கத்துக்கு சென்றவுடன் தங்களின் பெயர், ரேஷன் கார்டு எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடவும். இப்போது ஓடிபி உங்கள் மொபைலுக்கு வரும். அதனை கொடுத்து உங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதனை முடித்தவுடன் ‘மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தேன், பணம் வரவில்லை’ ‘குறுஞ்செய்தி வந்தது, ஆனால் பணம் வரவில்லை’ ‘பிற காரணங்கள்’ என்ற ஆப்சன் இருக்கும். இவற்றில் உங்களுக்கான காரணங்களை தேர்வு செய்து கடைசியாக சமர்பித்தால், 2 நிமிடங்களில் உங்களின் மேல்முறையீடு சமர்பிக்கப்பட்டுவிடும். எனவே, தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.

